முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வணங்கான்

காலங்கள் விரைந்தோடினாலும் - சில 
காயங்கள் மறைந்தோடுவதில்லை !

 நெடும் மாத இடைவேளிக்கு பின்னர் ஒரு சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. கதையின் பெயர், "வணங்கான்". ஜெயமோகனின் எழுத்துக்கள் என்றால் சொல்லவா வேண்டும். தலைப்பை கிரகித்ததும், "இறை மறுப்பாளரின் கதை" என மனதில் பதிந்து வாசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே தெரிந்தது. "இது இறைமறுப்பாளரினது அன்று. சாதியம் எனும் திரை மறுப்பாளரினது" என்று.
  
பொழிக்கம்பை நட்டுவைத்தாலும் தளிர்விடும் இயல்பு நாஞ்சில்நாட்டினது. "ஏலே பிலேய்... எனக்க மக்கா..." என்ற கொஞ்சும் கிளியின் நாக்கில் பிறக்கும் மொழியை போன்றது குமரித்தமிழ். இவ்வளவு எழிலை கொடுத்த இறை அல்லது இயற்கை, அக்காலத்தில் இந்த அழகு தெச்சணத்தை ஆண்டவர்களுக்கு நல்ல மனத்தை மட்டும் கொடுக்க தவறிவிட்டதுபோலும்.

தென் திருவிதாங்கூர் கொடுமைகள், நினைக்கும்போதே மனத்தை பெரும்வலியில் ஆழ்த்துபவை. மனிதனை மனிதன், விலங்குபோல் நடத்துவது அக்கால வாடிக்கை. அடி, மிதி, மானபங்கம், மறைக்கா அங்கம், அதற்குமொரு வரி, அதுவும் அளவுக்கொரு வரி மற்றும் இன்னும் பல பல விதத்தில் குறிப்பிட்ட மக்களுக்கு தங்களை "உயர்ந்தவர்கள்" என சுயபிரகடனம் செய்துகொண்டவர்கள் பரிசளிப்பதுண்டு.

இந்த கொடுமைகளுக்கெதிராய் குரல் கொடுத்து போராடியவர்களுள் சிலர் தென்மக்களின் தெய்வமானார்கள். சிலர் காலத்தால் மனத்தில் தேங்கினார்கள். இன்னும் சிலர் காலச்சுவடுகளிலிருந்தே அழிந்தார்கள். "மார்ஷல் நேசமணி" என்ற வீராளுமையை இந்த வணங்கான் கதை, மனதில் மறையாவண்ணம் புதைக்கிறது. அப்போதைய திருவிதாங்கூர் சட்டசபை உறுப்பினராக மகுடம் சூடியவர்; கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைவதற்கென "திருவிதாங்கூர் காங்கிரஸ்" எனும் அமைப்பை நிறுவி போராடியவர்; கடைசிவரை பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர்; மேலும் அவர் ஒரு வழக்கறிஞர்; மாடனின் சிலையில் தோன்றும் வீரம் அவரது மனத்தின் வீரம்.

நீதிதேவதை விட்டோடிய நீதிமன்றங்கள்தான் அக்காலத்தில்.... "இன்னவர்கள் முக்காலியில்தான் அமரவேண்டும். நாற்காலியில் அமரலாகாது" என்ற இழிந்த நீதிமன்ற கோட்பாட்டை கேட்டு சினம் கொண்டு, ஒவ்வொரு நீதிமன்ற அறையிலுள்ள முக்காலிகளையும் தூக்கி வீசிய மார்ஷல் நேசமணியின் மனத்திட்பம் என்னை பெரிதும் ஈர்த்தது.

வணங்கான் கதை முடியும்போது மனத்தில் எழுந்த ஒரு தீர்மானம் இதுதான் !
நாம் "பலகோடி வணங்கான்களை உருவாக்கவேண்டும்" !

வாசித்து பகிருங்கள் : https://www.jeyamohan.in/12218/
அக்கறையுடன்,
அரிகரசுதன்.




கருத்துகள்