முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளிக்காட்டு இதிகாசம்


கள்ளிக்காட்டு இதிகாசம் - ஏழுமணி நேர வாசிப்பு
கல்லூரியில் முதல்வருடம் படிக்கையில், வாசிக்கலாமே என எடுத்துவைத்தது! காலந்தள்ள, இதோ ஓர் ஏழுமணிநேரம்...

கருக்கல் நேரத்தில், மிகுந்த ஆவலோடு கள்ளிக்காட்டினுள் புகுந்தேன்... அது வேறு ஓர் உலகம். சீலக்காரியும், வைரவனும் அம்மக்களுக்கு சாமிங்க... கருவாலியும், காடையும் அந்த மண்ணோட பச்சிங்க... கல்தாழையும் கள்ளிமரங்களும் வேலி பாத்துக்கிடுங்க... பஞ்சமும் பட்டினியும் அழையா விருந்தாளிங்க... கோரக்கிழங்கும் கூழ் மறுமாத்தமும் தான் வயித்த கழுவுறதெல்லாம்... கொஞ்சம் விசேசமுனா கோழிச்சோறு...

வாழ்க்கைல போரட்டங்க்றது இல்லனா ஆர்வமே மறஞ்சுபோயிருங்க்றேன்... ஆனா, போராட்டம் மட்டுமே வாழ்க்கனா? அப்டி ஒருத்தருதான் இந்த கள்ளிப்பட்டிகாரது... பேயத்தேவரு அவரு பேரு... மண்ணுதான் அவரு உசுரு... "சிலபேர்தான் பிள்ளைகளை பெறுகிறார்கள்; பலபேர் பத்து மாதம் சுமந்து பிரச்சினைகளை பெறுகிறார்கள்" எனுமாறு இருந்தது அவரு பொழப்பு. பெத்தப்புள்ள பேருசொல்லாட்டியும் பேரபுள்ள இருக்கேன்னு தேறியவருதான் பேயத்தேவரு.

நாச்சியாவரத்துல அவருக்கு ஒரு சிநேகிதம். அழகம்மா அவருக்கு சரிபாதி. முருகாயி அசலூறாக்கும். கெட்டிகொடுத்த மகளுக்கு பதினஞ்சு பவுன் சங்கிலி கேட்டு மிரட்டி விரட்ட, அவளுக்காக வாங்குன கடனு வேறொன்னுக்கு ஆகிபோது. அழகம்மா, நீண்ட கெட கெடந்து, உசுரு போகும்போது, மனுசன் சொல்லி அழுகுற வார்த்த ஒவ்வொன்னும் தர்ற வலியிருக்கே... கள்ளிக்காட்டு முள்ளு குத்துனது அப்பதேன்... "நாப்பத்தஞ்சு வருசம் கூடவே ஓடித்தேஞ்ச உடம்பு ஒடுங்கி கிடக்குன்னதும்" வர்ற கலக்கம் இவ்ளதான்னு இல்ல. சேலகட்ட தெரியாத சிறுமியா இருந்தப்போ பெண்பாக்க போனதுலருந்து, சேந்து மண்வீடு கட்டி வாழ்ந்த நாப்பத்தஞ்சு வருச ஓட்டம் மனசுள ஓட, எனக்கு தர்ற பங்க தந்துட்டு செய்றத செய்யினு வந்து நிக்கான் பெத்த மவன் ஒருத்தன்.
 

புளியமரத்த ரெண்டு கும்பல்கிட்ட வேறவேற வெலைக்கு வித்த மவராசனால, பேயத்தேவரு மாட்ட கொண்டுபோறானுங்க பணம்கொடுத்தவங்க... அழகம்மா போனதே பொறுக்காத மனுசனுக்கு, அவ போறப்போ, "அம்மா... அம்மானு" கத்துன மாடுங்க போனது ஈரக்கொலையில ஈயங்காச்சுனமாதிரி ஆகுது. மாடுவளும் வளத்தவர தேடி மறுநாளே வந்துவிட, அதன் பின்னே பெருவில்லங்கம் தேடிவர, தலைக்கு  அஞ்சு பத்துன்னு போட்டு மாட்ட மீட்டுகொடுத்த கள்ளிக்காட்டான்கள, தெய்வமா பாத்தாரு பேயத்தேவரு...

பெத்தமவன் வாழனுமேனு நாச்சியாவர சிநேகிதத்துட்ட ஆயிரம் கடன் வாங்குறாறு... அந்த சிநேகிதத்த பூமி உண்டதும், அவரு பேற சொல்லி கொடுத்த கடன வட்டியோட எடுத்து வைன்னு சேலகட்டுன வில்லங்கம் தேடிவர, காடுகரையெல்லாம் கைவிட்டுபோவுது... பாட்டன், பூட்டன் கால்பதிஞ்ச மண்ணு, கனநேரத்துல இல்லனு ஆகுது... விடாதா கண்ணீரா...? தென்ன வச்சவன் தின்னுட்டு சாவான்னு சொன்னாங்களே.... அது நடக்காம போயிடுச்சேனு காட்டுல வச்ச தென்னங்கன்னுட்ட சொல்லி அழுகுறாறு.

சொந்தமா கெணறுவெட்ட அது ஒரு உயிர பலிவாங்க, "பொறந்தது தப்பா... வளந்தது தப்பா..." என சாயுறாறு பாவம்! இனிமே சீலக்காரியும் வைரவனும் காப்பாத்துவாங்கனு இருந்த அடுத்த நொடியே வருது பாக்கனும் ஒரு நெல... "பதினாலு கிராமும் வெளியேறலாம்.... இங்க வைக ஆத்து அணவருது... மதுர, ராமநாதபுரத்துக்கு தண்ணிவேணும்... ஊரு தண்ணில முங்கபோது... இது சர்கார் ஆண..." அப்டீன்னு...

உள்ளதுக்கு ஏத்தமாறி நட்ட ஈடுன்னதும், அழுதகோலமா ஊரே கெளம்புதுங்க... என் பாட்டன் பூட்டன் தொட்டு வாழ்ந்த மண்ணு இப்போ தண்ணிக்கெறையாவுதா... காடையெல்லாம் எரபெறக்க, கருவாலி முட்டையிட, நாலுபோகம் வெளஞ்சகாடு நாளைக்கு என்னதில்லன்னு அழுகுறாறு பேயத்தேவரு...  நட்ட ஈட்டையும் தட்டிப்பறிக்கும் பெத்தமவனுக்கு, அந்த கிழவன்மேல ஈவில்லையானு கேக்குது புளியமரம்... 

அழகம்மாவோட சேந்துகட்டுன அந்த மண்வீட்டோட ஒட்டுமொத்த கள்ளிக்காடும் தண்ணீல முங்குது... ஊருமக்க எல்லாம் போயாச்சு... பேயத்தேவருக்கு மட்டும் நகரமுடியல... ஆனாலும், என் மனசுக்காவ என்ன நம்பிருக்க சீவாதீக முங்கணுமானு எண்ணி, இருமாட்டையுங் கட்டி, பேரனோடயும் பெண்டுகளோடயும் புறப்படுறாரு. இருந்தாலும், தன் வீட்டு வத்துக்கள எடுத்துவர்றேனு மக்கள கரையில விட்டுட்டுபோறாரு... திரும்பல... தெனதின்னு வளந்த உடலு... தெனந்தெனம் நொந்த உடலு... பனபோல கருத்த உடலு... பஞ்சம் பல பாத்த உடலு... குடும்பக்காத்த பாட்டன் உடலு... கூடசொமந்த காட்டு உடலு... கள்ளிக்காட்டு மண்ணுல முளச்ச உடலு, கள்ளிக்காட்டு மண்ணுக்கே போச்சு...

"தண்ணீரில் மூழ்கிய கிராமமும், கண்ணீரில் மூழ்கிய மக்களும்" என்ற வாக்கியத்திலேயே ஒரு மார்நெருடலை உணரமுடியும். ஆம்... இது நடந்தகதைதான்... கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 2003-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. இன்றைய தேனி மாவட்டத்தின் வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் வாழ்வியல்தான் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. மூழ்கிப்போன 14 ஊர்களில் ஓர் ஊரான மெட்டூர்தான் கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் ஆகும். 42 ஆண்டுகளாய் நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரத்தை ஆனந்தவிகடனில் பவளவிழாவில் இறக்கிவைக்குமாறு காலம் கட்டளையிட, அந்த மாந்தன் எழுதினான். அந்த மாந்தனின் பெயர், வைரமுத்து.
இது ஒரு குடியானவனின் இதிகாசம்...
நேரம் கிடைத்தால் வாசியுங்கள்...
கள்ளிக்காட்டு இதிகாசம்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
👏👍