முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வகுப்பறை சாரல் (1) : ஆங்கிலமும் கணிதமும்

 
Engineering படித்தால் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என கடந்த சில வருடங்களாக தென்னிந்தியாவெங்கும் ஒரு பேச்சும் மனக்குழப்பமும் நிலவிவருவதை அறிவீர்கள். Engineering என்ற வார்த்தையே ஒரு கேலி பொருளாக சமூக வலைதளங்களில் வலம்வருவதையும் அறியமுடியும். திரைப்படங்களிலும் கூட, அத்தகைய காட்சிகள் இடம்பெறுகின்றன. பரவலாக ஒன்று ஒருவிதமாய் பேசப்படுகிறதென்றால் அதை இந்த மனம், "அப்படிதான் போல" என நிர்ணயித்துவிடும்! Engineering படிக்கும்போது, "எங்குன வேல கிடைக்கும்?" என மேலோட்ட பார்வை பார்த்தவர்களும் சரி! Engineering, "இங்குதான் படிக்கபோகின்றேன்" என்றதும் எள்ளி சிரித்த என் வயதார்களும் சரி! அனைவரின் குரலும் அடங்கிவிட்டது என்பதே உண்மை. ஆம்! நிச்சயமாக பொறியியல் படித்தால் வெற்றிபெற முடியும்! வகுப்பறை சாரல்கள் என்ற இந்த கட்டுரை தொடரில், அதற்கான வழியை க(கா)ட்டுகிறேன்! 

முதலாமாண்டு : பள்ளியிலிருந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும் நாள்... முதல் நாள்... முதன்முதலாக நம் ஆத்ம தோழர், தோழிகளை காணும் நாள்... ஆம்! புதுவித நட்புக்கள் கிடைக்கும் தருணம் அது! (பழைய நட்புக்களும் தொடரக்கூடும்) மேலும், புது ஆசிரியர்கள்! புது வகுப்பறை! அங்கே புது புது செடிக்கொடிகள்! என அனைத்தும் புதிதாய் தோன்றும் ஒரு நாள், கல்லூரியின் முதல் நாள். அந்த முதல்நாளிலிருந்து என்னவாறு நாம் ஆகவேண்டும் என்பதை மனதில் தைத்து வைக்கவேண்டும். இது அறிவுரை அல்ல! வழிமுறை! பல முதலாமாண்டு மாணவர்கள் தவறவிடும் ஒன்று என நான் கண்டது, இதை தான்! பொறியியலில் சேர்ந்த மாணவன், தான் இந்த பொறியாளனாகத்தான் ஆகபோகிறேன் என மனதில் தைக்கவேண்டும். "இறுதியாண்டில்தான் வேலைக்கு செல்வது! எனவே அதுதான் முக்கியமான ஆண்டு!" என்பர் சிலர். ஆனால் , உண்மையென்னவென்றால் முதலாமாண்டுதான் மிக முக்கியமான ஆண்டு. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். ஒரு முதலாமாண்டு பொறியியல் மாணவன், தான் இதுவாதத்தான் ஆகபோகின்றேன் என முதலாமாண்டிலேயே தீர்மானித்துவிட்டானென்றால், இறுதியாண்டில் அவன் அதுவாகவே ஆகிறான். சிலர் கேட்பார்கள்... "முதலாமாண்டில் தீர்மானம் மட்டும் எடுத்துவிட்டு, அரசடி பிள்ளையாரை போல அமர்ந்துவிட்டால், இறுதியாண்டில் வேலைக்குப்போய்விடுவானா?" என்று! நான் கூறுகிறேன்... "முதலாமாண்டிலேயே தீர்மானம் எடுக்குமளவிற்கு அவன் மனம் இருக்கிறதென்றால், அதை நோக்கி ஓர் அடி எடுத்துவைக்க அவனது மனம் அவனை இழுக்காதா..." என்று! இந்த இடத்தில்தான் ஊக்கம் என்பது தேவை! "ஊக்கம் என்பது ஊக்கு விற்பவனையும் தேக்கு விற்பவனாக்கும்" என, அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாங்குளத்தில் பயிலுகையில் காலை பிரார்த்தனை கூட்டத்தின்போது, முன்னே நிற்கும் ஓர் ஆசிரியர் கூறிய நியாபகம்! 

ஊக்கத்தின் தாக்கம் : என் வாழ்வில் நான் கண்ட இரண்டு பெரும் ஊக்கங்களை பகிர்கிறேன். சிறுவயதில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை தமிழ் வழிக்கல்வி பயிலுகையில், ஐந்தாங்கட்டளை என்ற ஊரைச் சார்ந்த பொருள்செல்வி என்ற ஆசிரியை தான் அனைத்து பாடங்களையும் எடுப்பார். எனக்கு, அப்போது படிப்பை விட, பாம்பு பல்லிகளில் சற்று ஆர்வமுண்டு! ஓடுபோட்ட பள்ளியென்பதால் மதியநேரம் சத்துணவு சாப்பிடும்போது, அதில் தங்கியிருக்கும் வௌவால்களின் குடும்பத்தை நலம்விசாரித்தல், மேலே வால் காட்டும் பெருச்சாளியை பே... என பார்த்தல் முதலானவை எனது அன்றாட கடமைகள். அன்று பள்ளியின் நீர்க்குழாய் தொட்டியில் தண்ணீர் பிடிக்கையில் நீரில் குளித்த தேனியை பிடித்து, தேனியிடம் கொட்டுவாங்கிய தழும்பு வலதுகாலின் பெருவிரலில் இன்றும் உள்ளது. ஆம்! அப்போது நம் உடல் பிஞ்சு உடல்! அப்போது பதிவது என்றும் அழியாது! பெரும்பாலும் பாடங்களில் கவனம் இருந்ததில்லை. அப்போது புத்தகங்களிலிருந்த கதைகள் மட்டும் இன்றும் மனதில் நிற்கின்றன‌. 

ஒருமுறை, அப்பா வாங்கி தந்த ஒரு புத்தகத்தில் தமிழ் உயிர்மெய் எழுத்துகளும் அதற்கு இணையான ஆங்கில வார்த்தைகளும் இருப்பதை ஆசையோடு பார்த்தேன். அதன் மூலம், பெ என்பதை PE என்றும், மா என்பதை MA என்றும் எழுதலாம் என அறிந்தேன். என் அப்போதைய நண்பன், மகாபிரபு என்ற‌ பப்புவும் என்னை போலவே அவற்றை நன்கு அறிந்திருந்தான். இதற்கு என் தந்தையே காரணம். எனது, முதல் ஆங்கிலம் தெரியாத ஆங்கில ஆசிரியர் என் அப்பா தான்! ஆனால் ஒன்று! எல்லாவற்றையும் எங்களால் சரியாக வாசிக்கமுடியாது. GA என்றால் கா, PE என்றால் பெ, MA என்றால் மா என்றெல்லாம் மட்டும் தான் எங்களுக்கு தெரியும். GAME என்று எழுதியிருந்ததை பப்பு, காம் என, மங்களம் டீச்சரிடம் வாசிக்க, அவர்கள் அதை கேம் என திருத்தினார்கள். ஆங்கிலம், கொஞ்சம் விநோதம் தான்! எனக்கோ மிகவும் இலகுவான வார்த்தை! PETROMAX என எழுதியிருந்ததை நானும் பெட்ரோமாக்ஸ் என்றே வாசித்தேன். உடனே பொருள் செல்வி டீச்சர், "இங்கீலீஸு நல்லா வாசிக்கிறியே" என‌ என்னிடம் கூறி, அதையே என் தந்தையிடமும் கூறினார்கள். இது ஆங்கிலத்தில் நான் பெற்ற முதல் ஊக்கம். ஆங்கிலத்து ஒளியாக PETROMAX என்ற வார்த்தை இருந்தது. அதன் பின்னர், நானும் பப்புவும் சேர்ந்து, சிலந்தியை குறித்த, UP WITH A JERK என்ற ஆங்கில பாடலை மனப்பாடமாக படித்தோம். CLAP YOUR HANDS என்ற அப்போதைய ஐந்தாம் வகுப்பு பாடலை நான் மட்டும் வீட்டின் மச்சியில் உட்கார்ந்து மனப்பாடம் செய்தேன். தலைமை ஆசிரியராக, திரு.மாறவர்மன் அவர்கள் அப்போது இருந்தார்கள். "அரிகரசுதன ஆங்கிலத்தில் அடிச்சிக்கமுடியாது" என பாராட்டிய நிமிடங்கள் மனதில் இன்னமும் முள் நகராத கடிகாரமாக நிற்கின்றன. மேலும், அதே மாறவர்மன் தான், கணிதத்தில் என்னை அடி அடி என அடித்தவர். அதற்கு காரணம், என் வலதுகாலில் அங்கிருந்த மரப்பெஞ்சு விழுந்ததுதான்! நான் பல நாட்கள் வீட்டில் நடக்கமுடியாமல் இருக்கும்போதுதான், அடிப்படை கூட்டல், கழித்தல் வகுப்புகள் நடந்தன.  ஐந்தாம் வகுப்புவரை, கணிதம் தெரியாதவன் என்ற பட்டம், நூலில்லாமல் என்னை சுற்றி சுற்றி வந்தது. மிகவும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், எனக்கு இரண்டாம் வாய்ப்பாடு கூட அப்போது தெரியாது. ஆங்கிலத்தில் எழுந்த ஊக்கம், என்னை ஆங்கிலத்தில் அறிவில் ஓங்கசெய்தது. கணிதத்தில் என்னை யாரும் கவனிக்காததால், அதை கண்டாலே, "ஐயோ" எனும் மனப்பான்மை மட்டுமே என்னிடம் இருந்தது. மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண்கள்... கணிதத்தில் மட்டும், பூதக்கண்ணாடி வைத்து பார்க்கும் அளவில் மதிப்பெண்கள். ஒரு முறை கூட FAIL ஆகவில்லை என்பதனால் மட்டுமே மனதில் ஓர் உறுதி இருந்தது என்பேன். இந்த மனப்பான்மையில் இருந்து வெளிவந்தது முதலாமாண்டு பொறியியல் பயிலும் போதுதான்! மீனாட்சி சுந்தர் என்ற என் கணித பேராசிரியரின் மலர் முகத்தில் விழித்தபோதுதான், இந்த மனநிலையிலிருந்து மோட்சம் கிட்டியது. என்னவோ என்றிருந்தவையெல்லாம் எளிமையென ஆனது அவரது வகுப்புகளில்தான்!

 
இன்று Machine Learning-ல் உள்ள, Partial Derivatives, Multivariable Calculus, Gradient Descent, BackPropagation, Linear Algebra முதலானவற்றை என்னால் எளிதில் புரிந்துகொள்ள அவரது வகுப்புகள்தான் வழிகாட்டின! இவற்றில் சிறு புத்தகங்கள் கூட தயார் செய்து வைத்துள்ளேன்.

உண்மையில், பன்னிரெண்டாம் வகுப்புவரை இவற்றின்மேல் எனக்கு எந்த ஈர்ப்பும் இருந்ததில்லை. கணித ஆசிரியர்களுக்கு நான், "இதெல்லாம் எங்க..." என்றுதான் தென்பட்டிருப்பேன் என நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போதும் நான் கணிதவகுப்புகளில் வாங்காத திட்டுகள் இல்லை. ஆனால், பத்தாம் வகுப்பு முடிய இரண்டு மாதங்களே உள்ள தருணத்தில், நான் சற்று கணிதம் மீது ஈர்ப்பு கொண்டேன். அதற்கொரு காரணம், அருள் அமுதா என்ற எனது அப்போதைய கணித ஆசிரியை, நான் இல்லாதபோது என்னைப் பற்றி வகுப்பில் கூறிய பாராட்டுறையும், நான், "சதம் அடிப்போம்" என்ற சிறு புத்தகத்தில் அன்று காலையில் பார்த்து எதிர்பாராத விதமாக பரீட்சையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அரைகுறையாக பதிலளிக்க, அதற்கு அவர்கள் தந்த ஐந்து மதிப்பெண்ணும் தான்! அரைகுறையாக செய்த கணக்கிற்கு 0 என்பதுதான் கணிதநியதி! ஆனால், எனக்கு ஐந்து மதிப்பெண் கிடைக்க ஒரு காரணம் இருந்தது. அந்த கணக்கை யாரும் செய்யமாட்டார்கள். பெரும்பாலும், சுலபமாக இருக்கும் கணக்குகளைத்தான் எங்கள் மக்கள் செய்வார்கள். ஆனால், எனக்கோ, எது சுலபம்? எது கடினம்? என்றே தெரியாது! படித்தேன்... கேள்வி வந்தது... எழுதினேன் (அரைகுறையாக)...  தெரிந்தோ தெரியாமலோ மந்தையிலிருந்து விலகினேன்... மேய்ப்பரின் பார்வை என்மீது பட்டு, ஐந்து மதிப்பெண்களை தந்துவிட்டார்! நான் வகுப்பில் இல்லாதநேரத்தில், "அரிகரசுதன் செஞ்சிருக்காம்மா அந்த கணக்க... உங்களுக்கெல்லாம் என்ன..." என்று அவர்கள் கூறிட, அதை என் நண்பன் ஸ்ரீராம் மூலமாக நானறிந்து, என்னை ஒரு புது பிறவியாக கண்டேன். இப்போது அந்த நிமிடங்களை நினைத்தாலும் சற்று சிரிப்புதான் வருகிறது. அதன்பின், எப்படியோ, பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றேன். கணிதத்தில் மட்டும் தான் 90க்கு கீழே மதிப்பெண் (87/100) பெற்றிருந்தேன். அங்கு வந்த உந்துதல் என்னை மென்மேலும் உயர்த்தியது. என் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியையின் கைப்பேசியில் அழைப்புகள் வரும்போது ஒரு பாடல் வரும். அதில், "வெட்ட வெட்ட வளருவான்! கொட்ட கொட்ட உயருவான்!" என்ற வரிகள் வரும். அப்படிதான் பின்னர் நடந்தது.


[சாரல் தொடரும்]


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
👌✌
S.S.VINOTH இவ்வாறு கூறியுள்ளார்…
Super thammbiyo.����������