முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (332)

3311. புத்தரின் கண்கள் பாதி திறந்த நிலையில் இருக்க காரணம்?
    இது ஒரு புத்த யோக பயிற்சியாக கருதப்படுகிறது. அதாவது, முழுவதுமாக கண்களை மூடினால் தூங்கிவிடக்கூடும் என்பதனால், பாதி திறந்த நிலையில் புத்தர் யோகம் புரிவதுண்டாம். [அண்மையில் , நான் வாசித்த ஒரு கவிதையில் , "ஆசையையெல்லாம் துறந்த புத்தர் ஏன் கண்களை மூடி தவம் செய்யவேண்டும்?" என்ற வரியைக் கண்டேன்‌. கண்ணை திறந்து வைத்தாலும் எதன் மீதும் ஆசை வராதே !? துறந்தாயிற்றே !? என்ற பொருளில் கவிஞர் கவிந்துள்ளார். அதை பார்த்தவுடன் என்றோ படித்த நியாபகம்.... புத்தரின் மலர் முகத்தில் பாதி மூடிய கண்கள். பாதி திறந்திருக்கும் கண்களை முழுவதுமாக கவிதையில் மூடிவிட்டார் நம் கவிஞர்.]

3312. போதி தருமருக்கு கண் இமைகள் கிடையாதா?
     உண்டு.... ஆனால்... [ஒரு சீன நாட்டு கதையின் படி, போதிதர்மர் ஒரு முறை தவம் இருக்கும்போது, தூங்கிவிட்டாராம். உடனே சினத்தில் தன் கண் இமைகளை வெட்டி எறிந்துவிட , அவை தேனீர் செடிகளாக முளைத்தனவாம். அன்றிலிருந்து, துறவியற்கு தூங்காமலிருக்க அந்த செடிகளிலிருந்து செய்த தேனீர் (Tea) கொடுக்கப்பட்டதாம். அதுவே காலப்போக்கில், மக்களுக்கும் ஆகிவந்ததாம். கேட்க ஆவலூட்டும் இந்த கதையை சீனர்கள் இன்றும் நம்புகிறார்கள். நம்மூர்களில் , தாய்மார்கள் பெரும்பாலும் பீடி சுற்றும் தொழில் செய்வதுண்டு. அலுப்பினால் ஏற்படும் தூக்கத்தை கட்டுபடுத்த , தூக்கம் வரும்போதெல்லாம் கடுங்காப்பி குடிப்பதுண்டு. அரிசியை வாயில் போட்டு மென்று மெல்ல உண்பதுமுண்டு. நம்மவர்களின் கைகளில் Mobileஐ கொடுத்தால் போதும். தூக்கமே வராது. அனைத்தையும் துறந்த துறவியர்களால் தூக்கத்தை மட்டும் துறக்கமுடியவில்லை.... ஆனால், எனக்கு ஒருவரை தெரியும்... அவர் தீக்குச்சிகளால் தூக்கத்தை துறந்தவர்... https://youtu.be/GT7OvyLJqtU ]

3313. போதி தருமர் தமிழராகயிருக்க , ஏன் சீனம் சென்றார்?
    புத்தமதத்தை பரப்புவதற்காக... [புத்தத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஹீனயானம் ஒன்று. மஹாயானம் பிரிதொன்று‌. இதில் எதற்கு ஹீனயானம் என பெயர் வைத்துள்ளார்களோ , அதுதான் உண்மையான புத்த இறையாண்மை என்பது என் முடிபு. இன்னும் சொல்லப்போனால், பைபிளின் மலைப்பிரசங்க போதனைகள் போலவே இவை இருப்பது மிக ஆச்சரியமான உண்மை. மஹாயானம் முழுக்க "போதிதர்மரின் இமைக்கா நொடிகளால் முளைத்த செடி" போன்ற கதைகளை காணலாம். ஆனால், பாருங்கள்.... ஹீனம் (ஈனம்) என்றால் இழிந்தது என்று பொருள். ஆனால் , அதில்தான் உயரிய எதார்த்த வாழ்வியல் சிந்தனைகளை காணமுடிகிறது. இடைக்காலத்தவர் சிலரின் கைவரிசையே இதற்கு காரணம்.]

3314. போதிதருமரின் தமிழ் பூர்விகம் என்ன?
     தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாகக் கருதப்படுகிறது. [போதிதர்மர் என்றதும் ஏழாம் அறிவு திரைப்படத்தில் வரும் நடிகரின் போதிதர்ம கோலம் நியாபகம் வரலாம்‌. ஆனால் உண்மையில், போதிதர்மர் மிகவும் கோபமான முகமுடையவராம். அதிக வேகத்தில் நடப்பாராம். குண்டான கண்களை உடையவராம்‌. பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருப்பாராம். ஏழாம் அறிவ பாத்துட்டு , அவர் சிரிப்பு சூரியா மாதிரி இருக்கும்னு நினச்சா , நாம  என்ன பண்ண....]

3315. புத்த மதத்தில் "லாமா" என்றால் என்ன பொருள்?
     புத்த மதத்தில், லாமா என்பது உயர்ந்த சித்தி பெற்றவர். அதாவது, மிகவும் ஞானம் பலித்து கதித்தோங்க பெற்ற தலைமை ஞானி. ["ஏலி ஏலி லாமா சபக்தானி" - இதை அறிவீர்களா? இதில் ஏன் லாமா என்ற சொல்....? சிந்திக்கக்கடவீர்கள்...]


3316. தமிழ்நாட்டில் நோக்கியா மொபைல் தயாரிப்பு தொழிற்சாலை எங்குள்ளது?
    ஸ்ரீபெரும்புதூர்


3317. தமிழகத்தில் மிகப்பெரிய காற்றாலை உள்ள இடம்?
     செட்டிக்குளம் (திருநெல்வேலி)


3318. ஹரப்பா என்றால் என்ன பொருள்?
    புதையுண்ட நகரம்


3319. மொகஞ்சதாரோ என்றால் என்ன பொருள்?
     இறந்தவர்களின் மேடு


3320. பழந்தமிழர் யாரை யவனர்கள் என அழைத்தனர்?
     கிரேக்கர்கள்

கருத்துகள்