முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விருந்தோம்பல் - திருக்குறள்


குறள் : 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

விளக்கம் :
உயிருடன் இருந்து நல்வழியில் பொருள்சேர்த்து வாழ்வதெல்லாம், விருந்தினரை பண்பாய் உபசரித்து, உதவிபுரிந்து அவர்தம் மனத்தில் நிறைவிடம் பெறுவதற்கேயாம்… சுற்றம்போற்ற வாழுதல் மேலானதாம். விருந்தினர் தன் வீட்டிற்கு வந்திருந்தால், இறைவனே வந்துள்ளதாக கருதி, மலர்முகத்தோடு நன்கு வரவேற்பது தமிழர் மரபு. உழைத்து உயிருடன் நிலைத்திருக்கும் வாழ்வில், விருந்தினர் உபசாரத்திற்கு பெரும் இடத்தை தமிழர் ஒதுக்கியது கண்கூடு. அக்கால விருந்தினர் உபசார சாரம், இக்காலத்தில்தான் உண்டா என்ன!? 

குறள் : 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விளக்கம் :
விருந்தினரை வீட்டுக்கு வெளியே அமரவைத்துவிட்டு, தாம் மட்டும் வீட்டினுள் இருந்து உண்ணும் உணவானது, சாவையே தள்ளிப்போடும் அருமருந்து அல்லது அமுதமே ஆகினும், அது விரும்பத்தக்கது அன்று! விருந்தினரை வெளியே காக்கவைத்தலையும் எந்த தமிழரும் விரும்புவதில்லை! ஓலைக்குடிசையில் வாழ்க்கையென்றாலும், உண்ணும் உணவு கஞ்சியேயென்றாலும், விருந்தினர் வரவு எனில் விரைந்து வரவேற்கும் மனம்-குணம் நம்முடையது… வெளியே நிற்கவே விடுவதில்லை! என் நண்பனிடம் வெகுநாட்களாக விருந்துக்கு வருகிறேன் என கூறிக்கொண்டிருக்கிறேன்… “நீ வா… விருந்தில்ல… உனக்கு மருந்து வைக்கேன்…”, என்கிறான். அவன் கூறுவது எந்த மருந்தோ அறியேன். என்னை பொறுத்தவரையில், என் நண்பன் என்னை உபசரித்து அளிக்கும் உணவு, சாவை விரட்டித் தள்ளும் மருந்து! இந்த தலைமுறையிடம் விருந்தோம்பல் குணம் சற்று தணிந்தே காணப்படுகிறது… 

குறள் : 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

விளக்கம் :
வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரித்து வாழும் வாழ்க்கையில், இன்னல்-சச்சரவுகள் ஏற்படுவது இல்லை. புண்ணியக் கண்ணோட்டத்தில் இந்த குறட்பாவை அணுகினால், இன்னல், சச்சரவுகளை விருந்தோம்பல் எனும் நற்குணம் வரவிடாமல் விரட்டும் என பொருள் கொளலாம். சற்று ஆராய்ந்து விளங்கினால், இன்னல், சச்சரவு ஏற்படும்போதெலாம், நம்மால் நன்கு விருந்துபசரிக்கப்பட்ட உறவினர்கள், அவற்றை முன்நின்று தீர்ப்பர் என முடிக்கலாம். முக்கிய குறிப்பு: அந்த கால உறவினர்களுக்கு மட்டுமே இந்த இரண்டாம் கண்ணோட்டம் பொருந்தும்…. 

குறள் : 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

விளக்கம் :
முகமலர்ச்சியோடு வீட்டிற்கு வரும் விருந்தினரை “வருக வருக” என அன்போடு உபசரிப்போரின் இல்லத்தில், திருமகளாம் இலக்குமி தாமே குடிகொள்வாள். திருமகள் வீட்டினுள் வருவதெற்கென சில செய்முறைகளெல்லாம் இன்றும் கிராமங்களில் வழக்கத்தில் உண்டு. அதிகாலையில் சாணந்தெளித்து கோலமிடுவது, அந்தியில் அனைத்து அறைகளிலும் விளக்கேற்றுவது, இரவில் யாருக்கும் பணம் தர மறுப்பது என இந்த இலக்குமி வரவேற்பு பட்டியல் நீளும். அதில் ஒன்றுதான், விருந்தினரை சிரித்த முகத்தோடு வரவேற்று, அவர்கள் மனம் மற்றும் வயிற்றை நிறையச்செய்வது…. “வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது”, என்று மகிழந்து பாடவேண்டுமெனில், விருந்தினரை மகிழ்ந்து உபசரிக்கவேண்டுமாம். 

குறள் : 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விளக்கம் :
விருந்தினரை உபசரித்த பின்னர், மிஞ்சியிருக்கும் உணவையே உண்டு வாழ்வோரின் நிலத்தில் விதைத்தல் வேண்டுமோ!!? அதுவே வளர்ந்திடும்! நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொருளாகினும், விருந்தோம்பலை இது எவ்விதம் ஏற்றுகிறது என உணரும்போது வியப்புதான் பயக்கிறது. விருந்தோம்பி வாழ்வாருக்கு தானாகவே நன்மைகள் மிகைக்கும் என இக்குறள் மொழிகிறது. தமிழர்தமக்கு, வீடுதேடி வருவோரெலாம் விருந்தாளிகளே… மாற்றானேயாகிடினும், விருந்தோம்பலை மறப்பதில்லை… இக்காலத்திலோ, விருந்தாளிகள் வீட்டிற்கு வருவதே சில வினையோடுதான்… “எங்க சின்னப்பையனுக்கு வேல கிடச்சிருக்கு தெரியுமா!?” என ஆரம்பிக்கும் வாதம், “உங்க பையன் என்ன பண்ணுதான்..!?” என வெடிக்கொளுத்தும்வரை ஓய்வதில்லை… ஆயினும் விருந்தோம்பல் செய்வோம்… தமிழர் கடமை என, மலர்மனம் மற்றும் இன்முகத்தோடு! 

குறள் : 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

விளக்கம் :
தன் இல்லத்திற்கு வந்த விருந்தினரையெல்லாம் உபசரித்து கொண்டாடி, இனிமேல் வரும் விருந்தினருக்காக காத்திருப்பவன், பரலோகத்தின் தேவர்களுக்கும் நல்ல விருந்தினனாவான். இதனை உடனடியாக பொருள்புரிந்து, விருந்தினரை நன்கு கவனித்தால், விரைவில் தேவருலகையடையலாம்… அதாவது இறந்துவிடலாம் என எண்ணம் வேண்டாம்… விருந்தினரை உபசரிப்பது ஓர் அறம். அத்தகையவர்களுக்கு, வீடுபேறு கிடைக்கும் என்றே இங்கு பொருள்புரியவேண்டும். ஆகவே, விருந்தினரை கவனியுங்கள். வேண்டாதவர்கள் என யாருமில்லை! நம் வீட்டிற்கு நம்மை தேடி வருபவர்கள் யாவருமே வேண்டியவர்கள்தாம்! உபசரியுங்கள்! 

குறள் : 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விளக்கம் :
விருந்தோம்பல் எனும் வேள்வியின் பயன், இவ்வளவுதான் என அளவிடமுடியாதது. விருந்தோம்பலை எவ்வளவு மனதாற செய்கிறோமோ, அவ்வளவு பயன் பெருகிடும். நெய்சொரிந்து,முணுமுணுத்து, குதிரைபோன்ற வாயில்லா உயிர்களை பலியிட்டு செய்யப்படுவது வேள்வி அல்ல! வேள்வி என்பது, ஒன்றனை விளைவிப்பது! ஒன்றனை ஆக்குவது! ஆம்… ஆக்கமே யாகம்! வேளாண்மை, பயிர்களை உருவாக்கி உயிர்களை நிலைபெறச்செய்யும் வேள்வி! அவ்வண்ணமே பல நற்குணங்களும்! தென்னவரும் நம் முன்னவருமான வள்ளுவர் பார்வையில், விருந்தோம்பல் ஒரு வேள்வி! அதில் தோன்றும் பயன், நாம் நம் விருந்தினரிடம் காட்டும் அன்பின் அளவினது! 

குறள் : 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

விளக்கம் :
விருந்தோம்பல் எனும் வேள்வியில் ஈடுபட்டு, விருந்தினரை உபசாரம் செய்து, அதனால் கிடைக்கும் நற்பயனை பெற்றிடல்வேண்டும். அத்தகைய விருந்தோம்பலில் ஈடுபடாதவர்கள், கடைக்காலத்தில் கண்டபொருள் திரவியங்கள் காணாமல் போகையில், துணையாக யாருமில்லாமல் வருந்திவாடுவர். விருந்தோம்பலின் முக்கிய சாரமே, ஆலமரவேர்போல திண்ணமாய் உறவுகள் ஒன்றுபடல்தான். அத்தகைய உறவுகளை பலப்படுத்த தவறுவதே, சில தருணங்களில் நம்மை தனிமரமாய் நிற்கவைத்துவிடும். இக்காலத்தில், நமக்கு நன்மைபயக்கும் உறவை கண்டுபிடிப்பது என்பது, கடல்கரைந்த பெருங்காயத்தேடல்தான்!!! அன்பீந்து விருந்தோம்பல் செய்குவோம்! 

குறள் : 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

விளக்கம் :
செல்வம் திரட்டி அது திரண்டபின்னரும், விருந்தோம்பலுக்கு எள்ளளவும் எண்ணம் கொள்ளாதவர்கள், மடமை மிகைத்தவர்களாம். செல்வத்தை மலைபோல குவித்து காணாயின்பமெலாம் கண்டு, அதன் பின்னர் மனதில் ஒரு வெறுமை தோன்றுமாயின், அவர்கள் செல்வமாய் திரண்டபொருளின் உண்மை பொருளறிவர். ஈந்து வாழுவதே இவ்வுலகில் மேல்வாழ்க்கை. இல்லாதவேளையிலும் இன்னொருவர் இன்மொழியில், இன்னார் இத்தகையவர் என இயம்பிடல்வேண்டும். அத்தகைய வாழ்க்கை வாழ்ந்திடல்வேண்டும். விருத்தோம்பலை, பசியென வரும் யாவருக்கும், புசியென கொடுத்தும் புரியலாம். ஐயன் வள்ளுவன் அறுதியிட்டதுபோல், அலைமகள் இலக்குமி அள்ளித்தருவாள். விருந்தோம்பி வாழுவீர்! 

குறள் : 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

விளக்கம் :
நுகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் அனுச்சம்பூவைபோல, முகம் மலராமல் வரவேற்கப்படும் விருந்தினர்களும் மனம் வாடிப்போவர். பெண்கள் தலையில் சூடும் மலர்கள் ஏராளம்! ஆனால், ஆண்கள் சூடும் மலரை அறிவீர்களா!? அதுவே அனிச்சம்! வரவேற்பது பெரிதல்ல…. மனங்குளிர, முகம் மலர வரவேற்கவேண்டும்! (திருமகள் வரவு எனும் சுயநலத்திற்காக சிரித்து வரவேற்போம் 😂) சிரித்திருக்கும் முகம், பிறரையும் நல்லெண்ணங்களில் ஆழ்த்தும். உறவுகள் பெருகி வலுக்க, அந்த சிறு புன்னகை உரமாகும். வடிவேலு நகைச்சுவையில் வருவதுபோல, “போங்க போங்க” என விருந்தினரை வீட்டிற்குள் திணிப்பது சால்பன்று! வரும்போதே சிரித்து அவர்களையும் முகம் மலரச்செய்யவேண்டும்! அனிச்சம் அழகாய் மலர்ந்ததுபோல!! 

கருத்துகள்